Arakkonam Online - Arakkonam Properties - Land Sales
  • Home
  • Services
    • New Globus Consultancy Services
    • Real Estate
  • Agriculture
  • About Arakkonam
    • Thought for the day
    • Important Contacts >
      • Banks & ATM's
    • Villages in Arakkonam Taluk
    • Public Service officials
    • Transport
    • Hotels
    • Contact Us
    • Suggestion Box
  • Temples
    • Thakkolam
    • Kanchipuram
    • Thiruvalangadu
    • agaram
    • Thiruthani
    • Sholinghur
    • Golden Temple Vellore
  • Arakkonam - Free Service

விவசாய விமோசனம்

10/5/2012

0 Comments

 

விவசாய விமோசனம்

 By  ஆர்.எஸ். நாராயணன், 
 
 
ஓரு காலகட்டத்தில் விவசாயம் சுமார் 75 சதவிகித மக்களின் வாழ்நிலையைக் காப்பாற்றி வந்தது. கடந்த 20 ஆண்டுகளில் நாம் பெற்ற நகர்ப்புற வளர்ச்சியால் விவசாயத்தை மட்டும் நம்பிவந்த மக்கள் மாற்றுத் தொழில்களை மேற்கொண்டுவிட்டதால் 2010-11 புள்ளிவிவரங்களின்படி இன்று சுமார் 50 சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.

 ஒட்டுமொத்த ஜி.டி.பி. வருமானக் கணக்கில் விவசாயத்தின் பங்கு 14.5 சதவிகிதம் மட்டுமே. இந்திய
ஏற்றுமதியில் 10.5 சதவிகிதம் வரை விவசாயம் பங்கேற்று வருகிறது. ஒரு பக்கம் விவசாயம் அழிந்து கொண்டிருந்தாலும் விவசாய விளைபொருள்களின் தேவை பெருகியவண்ணம் உள்ளது.

தொழில் வளர்ந்தால் போதுமா? ஒவ்வொரு மனிதனுக்கும் வயிறு நிறைய உணவு வேண்டுமே? உணவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் விர்ரென்று விலைவாசி ஏறும். விலைவாசி ஏறினால் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ரத்த அழுத்தம் ஏறி, "வட்டியை உயர்த்துவேன்' என்று பயமுறுத்துவார். வட்டியை உயர்த்தினால் தொழில்துறை கலகலத்துப் போகும். இப்போது உணவு விலை ஏற்றம் காய்கறி - பழங்கள், பருப்பு, புரத உணவுகளான முட்டை - இறைச்சிகளில் ஏற்பட்டு உணவு விலைப் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. அரிசி - கோதுமை விலை ஏற்றத்தால் அல்ல.

விவசாய விளைபொருள்களின் தேவை உணவில் மட்டுமல்ல; ஏற்றுமதி மற்றும் உணவுசார்ந்த
தொழில்துறைக்குரிய கச்சாப்பொருள்களின் வழங்கலாகவும் விவசாயம் உள்ளது. மருத்துவத்துறைக்குரிய மூலிகைகளையும் விவசாயம் வழங்குகிறது.

எவ்வளவுதான் ஓர் அரசு விவசாயத்தைப் புறக்கணித்தாலும்கூட, இந்திய விவசாயத்தை அழிப்பதற்காகவும்,  அரசுத்துறை மூலதனங்களைத் தனியார்களுக்குத் தாரை வார்க்கவும், சில்லறை விற்பனையை வால்மார்ட்டுக்கு வழங்கவும் எத்தனை ரகுராமன் ராஜன் போன்ற அமெரிக்க - இந்தியப்
பொருளாதார நிபுணர்கள் சிகாகோவிலிருந்து வந்தாலும்கூட, விவசாயத்தை அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது.

"ஒபாமாவின் கையாள்' ஒருவர் பிரதமரின் பொருளாதாரச் செயலராக நியமிக்கப்பட்டதன் எதிரொலியை
நாடாளுமன்ற நடவடிக்கைகள் பிரதிபலித்துள்ளன. சில்லறை வர்த்தகம் பற்றியும், அரசுத்துறை மூலதனம் பற்றியும் அண்மையில் சிதம்பரமும் மன்மோகனும் பேசியுள்ளதை நினைத்துப் பார்த்தால், "பின்புலம்' என்னவென்று புரியும். எல்லா எதிர்ப்புகளையும் மீறி சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுவிட்டது.

இந்திய விவசாயம் சித்திரவதைகளுக்குள்ளாகிவிட்டதை விவசாயிகளின் தற்கொலை வளர்ச்சி  எடுத்துக்காட்டினாலும், இந்திய விவசாயம் விமோசனம் பெறும் மார்க்கத்தைப் பற்றி நாம் யோசிப்பது நன்று.

விவசாயத்தில் இதுநாள்வரை நாம் கடைப்பிடித்து வந்த கொள்கையில் அரசு கொள்முதல் - வினியோகத்திட்டம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. குறைந்தபட்ச விலையைச் சற்று அதிகபட்ச விலையாக மாற்றி - நெல், கோதுமை, கரும்பு ஆகிய மூன்று பயிர்களுக்கு மட்டுமே அரசுப்பணம்
விரயமாகியுள்ளது. மொத்த ஜி.டி.பி. வருமான மதிப்பில் சுமார் 25 சதவிகிதம் விவசாயத்துக்குச் செலவானதில் மேற்கூறிய மூன்று பயிர்களுக்கு மட்டுமே காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத்துக்கு என்று செலவழித்த பணம் விவசாயிகளுக்குச் செல்லாத வகையில் விவசாய உணவு மானியம் திசைமாறிச் சென்றுள்ளது. இருப்பினும்கூட குறிப்பாக அரிசிக்காகவும் கோதுமைக்காகவும்
ஒதுக்கப்பட்ட உணவு மானியத்தால் - குறைந்தபட்ச விலையின் அதிகபட்ச உயர்வு காரணமாக நமது தேவைக்கு மேலாகவே பல லட்சம் டன்கள் கோதுமையும் நெல்லும் உணவு மானியத்துடன் ஆதரவு விலை கொடுத்துக் கொள்முதல் செய்து வாங்கியதெல்லாம் கொட்டிவைக்க இடமில்லாமல் குப்பையில் கொட்டப்படுவதைத் தடுக்க முடியுமா?

சமயங்களில் தொலைநோக்கு இல்லாத சில நல்ல கொள்கைகள் பயனற்றுப் போவதற்குரிய உதாரணம் இது. ஒவ்வோராண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகபட்ச உயர்வு பிளஸ் போனஸ் காரணத்தால் விளைவதையெல்லாம் வாங்கி வாங்கிக் குப்பையில் கொட்டும் நிலைமையைத் தொடர்ந்து அனுபவிக்கிறோம். உணவுக் கொள்முதல் உரிமையை மறைமுகமாக வால்மார்ட்டுக்கு
வழங்குவதினால் பிரச்னைகள் தீராது. மாற்று வழியை யோசிக்கலாம்.

ஒரு மனிதனின் உணவுத்தேவை பற்றிய புள்ளிவிவரமே புரட்டானது. அரிசி மற்றும் கோதுமையைத் தவிர, வேறு உணவுகள் கணக்கில் வருவது இல்லை. காலம் மாறிவிட்டது. நடுத்தர மக்கள் அரிசி,
கோதுமைக்காக மட்டுமே பணம் செலவழிப்பதில்லை.

பருப்பு, காய்கறிகள், பழங்கள், முட்டை, பால், இறைச்சி என்று தமக்கு வேண்டிய புரதப்பொருள்,
தாதுப்புக்கள், வைட்டமின்கள் பெறவும் பணம் செலவழிக்கின்றனர்.

மேற்கூறிய தேவையைக் கருத்தில்கொண்டு வழங்கப்படும் உணவு மானியம் புரத உணவுக்கும் பங்கிடப்பட வேண்டும்.

பருப்பு, பால், முட்டை, காய்கறி - பழங்கள் உற்பத்தியை உயர்த்தும் விவசாய முதலீடுகளை உயர்த்த வழி காண வேண்டும்.

பொது விநியோகத்துக்காக நெல், கோதுமை எவ்வளவு தேவையோ அவற்றை மட்டுமே கொள்முதல் செய்து, மானியப் பணத்தை மேற்படி புரத உணவு முதலீடுகளாக மாற்றும் உருப்படியான கொள்கையை வரைய வேண்டும்.

நெல், கோதுமைக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகபட்ச உயர்வுடன் போனஸ்
வழங்கிக் கொள்முதல் என்ற பெயரில் உணவை வாங்கிக் குப்பையில் கொட்டுவதை நிறுத்தி, அதே
குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகபட்ச உயர்வைப் பருப்பு வகை தானியங்கள், கம்பு, கேழ்வரகுப் பயிர்களுக்கு வழங்கி அதற்கான சேமிப்புக் கிட்டங்கிகளையும் கட்டிக் கொள்முதல்செய்து மக்களுக்கு வினியோகம் செய்யும்போது விவசாயிகள் நெல், கோதுமையை விடுத்து மேற்படி மாற்றுப்பயிர் சாகுபடியில் கவனம் செலுத்துவார்கள்.

உணவுப் பயிர்களின் சாகுபடிப் பருவம் தொடங்கும்போதே நமது தேவை, சேமிப்புக் கிட்டங்கிகளின்
கொள்ளளவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இவ்வளவுதான் நெல், கோதுமையில் இந்த ஆண்டுக்
கொள்முதல் என்று முன்னறிவிப்பைச் செய்ய வேண்டும். அதே சமயம், உலர் தானியங்கள் மற்றும் பருப்பு வகைக் கொள்முதல் குறித்தும் முன்னறிவிப்பு செய்ய வேண்டும்.

அதிகமான தண்ணீர்ச் செலவும், மின்சாரச் செலவும் உள்ள நெல், கோதுமை, கரும்பு மூன்றையும்
அளவுடன் சாகுபடி செய்து புரதச்சத்துள்ள பருப்பு வகை சாகுபடி, கம்பு, கேழ்வரகு போன்ற தானியவகைச் சாகுபடியில் தீவிர கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.

கரும்பை எடுத்துக்கொண்டால் அதன் பயன் சர்க்கரையும், சாராயமுமே. மேற்படி நுகர்வையும்
அளவிட்டு மாற்றுப்பயிர் சாகுபடிக்குத் திட்டமிடலாம்.

கரும்பு பயிராகும் இடங்களில் காய்கறி, பழங்கள் சாகுபடி செய்யலாம்; அப்படிச் சாகுபடி செய்ததைச் சாகுபடியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களை கிராமம்தோறும் உருவாக்கி அதன் மூலம் விற்பனை செய்யலாம். அதற்கான ஆள் பலத்தை மகாத்மா காந்தி ஊரக வேலைக்காப்புறுதித் திட்டத்துடன் இணைத்துச் செயல்படலாம்.

பால் உற்பத்தி விஷயத்தில் "ஆவின்' கொள்முதல் நிலையங்களை ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கி சென்னையில் உள்ள "ஆவின்' கட்டுமானங்களை ஈரோடு, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, வேலூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்ட நகர்களிலும் அமைத்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் இன்று தனியார் பால் நிறுவனங்கள் அதிகமாகவும் "ஆவின்' கிளை நிறுவனங்கள் குறைந்தும் வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். கறவை மாடு வைத்துள்ள விவசாயிகளுக்கு வேண்டிய தீவனங்களையும் மலிவு விலையில் "ஆவின்' வழங்க முன்வருமானால் பால் உற்பத்தி  பெருகும்.

"அமுல்' நிறுவனத்தை உருவாக்கிய குரியன் அமரராகிவிட்டார். அவர் கற்றுத்தந்த வழியில் செயல்பட்டால் தமிழ்நாட்டில் "ஆவின்', சிகரத்தைத் தொடலாம். கர்நாடகம், மகாராஷ்டிர  மாநிலங்களில் "அமுல்' கூட்டுறவுப் பால் விற்பனை சங்கத்துக்கு இணையாக அரசுத்துறை செயல்படுவதை ஆவின் கருத்தில்கொண்டு பால் விநியோகத்தில் தனியார் ஆதிக்கத்தைப் போட்டி மனப்பான்மையுடன் முறியடித்துப் பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி விவசாயம் விமோசனம் பெற உணவு - விவசாய மானியங்களை மட்டுமே நம்பினால் விவசாயத்தின் பொருள் ""நெல் சாகுபடியும் கோதுமை சாகுபடியும்தான்'' என்ற நிலைமைதான் எஞ்சும்.

நாம் நல்லபடி நலவாழ்வைப் பெற நம் உணவில் புரத உணவுகள் தாதுப்பு வைட்டமின்கள் தரக்கூடிய பருப்பு வகைகள், கம்பு, கேப்பை, வரகு, தினையுடன், காய்கறி, பழங்கள், பால், முட்டை, இறைச்சி என்ற எல்லா அம்சங்களிலும் உற்பத்தியை உயர்த்த வேண்டும்.

நெல், கோதுமை, கரும்பு தவிர்த்து மேற்படி இதர உணவுகளுக்கும் வேண்டிய முதலீடுகளை உயர்த்த வேண்டும். ஏற்றுமதிப் பொருள்களில் கவனம் செலுத்த வேண்டும். பருப்பு, சமையல் எண்ணெய் இறக்குமதிகளைப் படிப்படியாகக் குறைக்கும் அளவில் உள்ளூரில் அவற்றின் உற்பத்தியை  உயர்த்தத் திட்டமிட்டால் மட்டும் போதாது.

நெல்லுக்கும், கோதுமைக்கும் வழங்கப்பட்ட அதே "பேக்கேஜ்' திட்டம், புரத உணவுகளுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் தாராளமாக சாராயம் குடிக்கத்  தமிழ்நாட்டில் "டாஸ்மாக்' கெட்ட உதாரணமாக உள்ளது.

அதுபோல் சத்துணவு - நல்லுணவு உற்பத்தியைப் பெருக்கும் நல்ல உதாரணத்தைத் தமிழ்நாடு  முன்வைத்தால் மற்ற மாநிலங்கள் பின்பற்ற உதவலாம். வாழ்க  பாரதம்.

0 Comments

உரத்த சிந்தனை : ஊழலுக்கு துணை போகும் பதவிகள் : எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி

10/2/2012

0 Comments

 
மக்கள் வளம் முதல், எல்லா வளமும் நம் நாட்டில் உள்ளது. இந்த வளத்தை, பலத்தால் அடைய வேண்டும் என்று, எத்தனையோ படையெடுப்புகள், இந்தியா மீது துவங்கப்பட்டன. ஒவ்வொரு
முறையும் இந்தியா, புதுபொலிவுடன் தன்னைக் காத்துக் கொண்டது.

லட்சக்கணக்கான உயிர்களை இழந்து, ஆங்கிலேயர் ஆட்சியை விரட்டி, மக்கள் கண்ட சுதந்திரம் என்று
வர்ணிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் பாலும், தேனும் ஓடும் என்றனர். ஆட்சி மாறியது; ஆனால், காட்சி மாறவில்லை. உலகக் கொள்ளைக்காரன் போய், உள்ளூர் கொள்ளைக்காரர்கள் பலர் வந்து விட்டனர்.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் அடிப்படையில் எல்லாருக்கும், "சம நீதி' என்று நாம் படைத்து, நாமே ஏற்றுக் கொண்ட அரசியல் சாசனம், நம்மை வழிநடத்த துவங்கியது. புனிதமான அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பதவி வகிக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒருவரை ஒருவர் குறை கூறும் நிலைக்கு வந்துவிட்டது.

இரண்டாம் உலகப்போர் துவங்கிய போது, ராணுவத்திலும், பொது வினியோகத்திலும் உள்ள லஞ்சம் மற்றும் ஊழலை கண்டறிய, "சிறப்பு காவல் அமைப்பு' 1941ல் ஏற்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், "டில்லி சிறப்பு காவல் அமைப்பு' எனும் பெயரில், உள்துறைஅமைச்சகத்துடன் இணைக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின், நாட்டில் லஞ்சம், ஊழல் குறைய வேண்டும் என்று எண்ணிய அன்றைய பிரதமரும், உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல், தன் சட்ட ஆலோசகர் கரம் சந்த் ஜெயின் மூலம், டில்லி சிறப்பு காவல் படையை நிர்வகித்து வந்தார்.இந்த, டில்லி சிறப்பு காவல் அமைப்பு, 1963, ஏப்., 1ம் தேதி முதல், மத்திய புலனாய்வு அமைப்பு என்றும், சி.பி.ஐ., என்றும் அழைக்கப்பட்டது.

இப்போது சி.பி.ஐ., இத்தாலி ஆயுத இடைத்தரகன், போபால் விஷவாயுக்கு சொந்தக்காரனை, "யுனைடெட் கார்பைடு' என்று, உலக குற்றவாளிக்கு உதவி வருகிறது. உள்ளூரில் நடக்கும் கொலை,
கொள்ளைகளை கண்டறியும், "துப்பறியும் சாம்பு'வாக மாறிவிட்டது சோகத்திலும் சோகம்."ஊழல் ஒழியவே இல்லை. இந்தியா இனி உருப்படாது' என்று சந்தானம் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்த பின் உருவானது தான், ஊழல் கண்காணிப்பு ஆணையம், 1964ல் ஏற்படுத்தப்பட்டது.

*இது ஒரு ஆலோசனைக் குழு, இதன் முடிவை ஏற்க வேண்டுமா என, முடிவு செய்யும் அதிகாரம்
அரசிடமே உள்ளது.
*1,500 துறைகள் (மாநில - மத்திய) ஊழலை கண்காணிக்க, 300 ஊழியர்களுடன் உலா
வருகிறது.
*சி.பி.ஐ.,க்கு விசாரணை செய்ய உத்தரவிட்டாலும், வழக்கு விவரங்களை சி.பி.ஐ.,யிடம் கேட்க முடியாத ஆணையம்.
*ஆளும் கட்சியான பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஆணையரை தேர்வு செய்யும் போது, மற்றொரு
உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவரால் எதிர்ப்பு மட்டுமே காட்ட முடியும். திருடன் கையில் சாவி கொடுத்த கதையாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து, பி.ஜே.தாமசை துரத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு பெற வேண்டி வந்தது. உத்தரவு வந்த பின்பும் நாற்காலியை
காலி செய்யாமல் அடம்பிடித்த புண்ணியவான்.

ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சொத்தை கைப்பற்ற, ஊழல் கண்காணிப்பு
ஆணையத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஆனால், பல் பிடுங்கிய பாம்பை பார்த்து, நாம்
மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 324வது ஷரத்து படி
அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம், கொள்ளைக் கூட்ட தலைவன் கூட தேர்தலில் நின்றால்,
ஒன்றும் சொல்லாது. "கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் நிற்கக் கூடாது' என்று அறிக்கை தர அச்சப்படுகிறது. எப்படியோ, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் சொத்து மதிப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுப் பெறுகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 148 ஷரத்துப்படி உருவாக்கப்பட்டது தான், இந்தியத் தலைமைத்
தணிக்கையாளர் பதவி. மத்திய, மாநில அரசுகளின் வரவு-செலவுகளை தணிக்கை செய்து,
ஜனாதிபதியிடமோ, மாநில கவர்னரிடமோ அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

தற்போது, தலைமைத் தணிக்கையாளராக உள்ள வினோத் ராய், 2008ல் தலைமைத் தணிக்கையாளராக பதவி ஏற்றார். இவருக்கு முன், 10 பேர் இந்த பதவியை வகித்துள்ளனர்.அரசுக்கு சாதகமாக இவர்கள் போனதால், பல பல ஊழல்கள் வெளிச் சத்திற்கு வராமல் போய்விட்டன. வினோத் ராய் பதவி ஏற்ற பின், பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.தற்போது கிட்டத்தட்ட, 59 அறிக்கைகளை மத்திய கணக்குக் குழு ஆய்வு செய்து வருகிறது. தலைமைத் தணிக்கையாளர் தந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு, விவரம் பெற்று, மத்திய கணக்குக் குழு ஆய்வு செய்து, ஓர் இறுதி அறிக்கை தரும் முன் லோக்சபா, ஆயுள் காலம் முடிந்து விடும். மத்திய கணக்குக் குழுவின் தலைவராக உள்ள எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், ஆளும் கட்சியாக மாறிவிடுவர்.
தற்போது, இந்தியத் தலைமைத் தணிக்கையாளராக உள்ள வினோத் ராயின் பதவி காலம், மே. 22, 2014 வரை உள்ளது. அதற்குள் எத்தனை ஊழலை இவர் அம்பலப்படுத்துவார் என்று, ஆளும் கட்சி அரண்டு
போய் உள்ளது.

எல்லாத் துறைகளையும் போன்று, நீதித் துறையிலும் ஊழல் வேர் விட்டுள்ளது. நீதித் துறையையும்
ஆளும் கட்சி ஆட்டிப் படைக்க முடியும் என்பதை, ஆள் கொணர்வு வழக்கு, 1976ல் உணர்த்தியது. இந்திரா கொண்டு வந்த மிசா சட்டத்தில், "சிறையில் உள்ள கைதிகளின் அடிப்படை உரிமையை பறிக்க, அரசுக்கு அதிகாரம் உண்டு' என, நான்கு நீதிபதிகள் கூறினர்.
தலைமை நீதிபதி ஏ.என்.ராய், பி.என்.பகவதி, யு.வி.சந்திரசூட், எம்.எச்.பெக் ஆகியோர் தான் அவர்கள். ஆனால், "மிசா' சட்டம் செல்லாது; சிறையில் உள்ள கைதிகளின் அடிப்படை உரிமையில் அரசு தலையிட முடியாது' என்று, நீதிபதி எச்.ஆர்.கன்னா மட்டும் கூறினார். இந்திராவின், "மிசா' சட்டத்திற்கு எதிராகத் தனிப்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மூப்பின் அடிப்படையில், இந்தியாவின் தலைமை நீதிபதியாக வரவேண்டிய அவருக்கு வாய்ப்பு தராமல், ஜன., 29, 1977ல், எம்.எச்.பெக் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.

எனவே, தன் பதவியை கன்னா, ராஜினாமா செய்தார். அவர் தலைமை நீதிபதியாக இருந்திருந்தால்,
ஜூலை.2, 1977 வரை, பதவியில் இருந்து இருப்பார். "மிசா' சட்டத்தை எதிர்த்த  எச்.ஆர்.கன்னா தலைமை நீதிபதியாக வருவதை, இந்திரா விரும்பவில்லை.இந்திராவுக்கு சாதகமான அடிப்படையில் தீர்ப்பு கூறிய பிற நீதிபதிகள் எல்லாம், இந்தியாவின் தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்துச் சென்றனர்.

இந்திய ஜனாதிபதிக்கு இணையாக உள்ள தலைமை நீதிபதி, தன் மருமகன்கள் பெயரில் சொத்துகளை
குவித்தபின், இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை அலங்கரிப்பது என்பது, நம்  நாட்டில் மட்டுமே முடியும்.மதுரையில் வெடிகளை வைத்து, "பல்லவ மன்னன்' போல கல்லை எல்லாம் குடைந்து விட்டனர். ஆளும் கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமல், இது நடந்து இருக்குமா? மலையை காணவில்லை எனவும், குளத்தை காணவில்லை எனவும் எப்.ஐ.ஆர்., போட வேண்டிய நிலை."எல்லா வளமும் போய் சேரும் வெளிநாட்டில்... நாம் கையை நக்க வேண்டும் உள்நாட்டில்...'
இ-மெயில்: [email protected]
0 Comments

    Author

    Hi all!
    Just I found some articles from my friends mails which is worth to share in this Blog!

    Archives

    November 2014
    July 2014
    May 2014
    April 2014
    December 2012
    October 2012
    September 2012
    June 2012
    May 2012
    April 2012
    March 2012
    February 2012

    RSS Feed

    Categories

    All
    General
    Health
    Parenting
    Self Development

Powered by Create your own unique website with customizable templates.