கடந்த, 40 ஆண்டுகளாக, ஒரு லட்சத்திற்கும் மேலான மரக் கன்றுகளை நட்டு, பராமரித்து வரும், 65 வயது பெரியவர், கருப்பையா: அரியலுார் மாவட்டம், கல்லுார் தான், என் பூர்வீகம். அப்பா சிதம்பரம், ஒரு காந்தியவாதி. அவர் செய்யும் சேவைகளை, நாங்க சின்ன புள்ளையா இருக்கும் போதே பார்த்திருக்கிறோம். ஆடு, மாடுகளை ஓட்டிக்கிட்டு, நான் மேய்ச்சலுக்கு போவேன். செல்லும் வழியில், கீழே எந்த பேப்பர் கிடந்தாலும், அதை எடுத்து படிப்பதை பழக்கமாக வைத்திருந்தேன்.அதில், பூமி வெப்பமடைவது பற்றியும், அதிக மரக்கன்றுகளை வளர்த்தால், பூமி வெப்பமடைவதை குறைக்கலாம் எனவும், எழுதப்பட்டிருந்தது.அதனால், எங்க ஊரு, கருப்பையா கோவில்ல, முதல் மரத்தை நட ஆரம்பித்தேன். அது வளர வளர, எனக்கு ஆர்வம் அதிகமானதால், மரக் கன்றுகளை, நானே உற்பத்தி செய்ய ஆரம்பித்தேன். அப்ப ஆரம்பித்தது தான், இந்த மரம் நடும் வேலை.தினமும் நான்கு மணி நேரம், ஆடு, மாடு மேய்ச்சிக்கிட்டு, மரக்கன்றுகளை நட கிளம்பி விடுவேன். இப்படி உள்ளூர் மற்றும் வௌியூர்ன்னு, பல பகுதிகளில் மரக்கன்றுகளை வைத்தேன்.பின், இதுவே என் முழுநேர வேலையாக மாறியது. சுடலை கண்ணன் என்பவர், கலெக்டராக இருந்த போது, அவரிடம் மரக்கன்றுகளை நட அனுமதி கேட்டு, அரசு நிலத்தில் நிறைய மரக்கன்றுகளை நட்டேன். அதன் பின், அரசு சிமென்ட் ஆலைக்கு மரம் நட, என்னை அழைத்தனர்.கடந்த, 40 ஆண்டுகளாக, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு, அதை பராமரித்தும் வருகிறேன். ஆல், அரசு, அத்தி, வேம்பு, புங்கன், தேக்கு, மகிழம், மா, பலா, எலுமிச்சை, கொய்யா என, பல லட்சம் மரக் கன்றுகளை, நான் சாகும் வரை வளர்த்துக் கொண்டே இருப்பேன்.சுற்றுலா தலங்களான, கலியுக வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், லெமூரியா கண்டத்தில், கடலாய் இருந்து வெளியே வந்த திட்டையையும், பார்க்க வரும் சுற்றுலா பயணிகளிடம், மரக்கன்றுகளை தருகிறேன். மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, இலவசமாக மண் பரிசோதனை செய்வதுடன், அங்கு மரக்கன்றுகளையும் நடுகிறேன்.தற்போது, 65 வயது நிறைந்த நான், அரியலுார் அரசு சிமென்ட் ஆலையில் பணியாற்றி வந்தாலும், மரக்கன்றுகளை நடுவதை நிறுத்தவில்லை. என் சேவைக்கு, பாராட்டு பத்திரம் வழங்கி உள்ளனர்.சுண்ணாம்பு சுரங்கம் உள்ள கந்தக பூமியை, பொதுமக்கள் கடந்து வருகையில், நான் வைத்த மரங்கள், ஈரக்காற்றை அள்ளித் தெளித்து, சிரித்தபடி தலையாட்டி வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
|
AuthorHi all! Archives
November 2014
Categories
All
|